பிரதமர் மற்றும் இதர நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் ஊதியத்தில் 30 சதவிகித ஊதியக் குறைப்பிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இவர்களைத் தவிர குடியரசுத் தலைவர், ஆளுநர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் ஆகியோரின் ஊதியங்களும் குறைக்கப்பட இருக்கின்றன.
இது தொடர்பான ஒரு அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவையினால் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. இது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியங்கள், படிகள் மற்றும் ஓய்வூதியங்கள் சட்டம், 1954 என்ற சட்டத்தைத் திருத்துகின்றது.
2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருத்தப்பட்ட இந்தச் சட்டத்தின்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு படிகளை (சலுகைகளை) தவிர்த்து மாதாந்திர ஊதியமாக ரூ.1 இலட்சம் பெறுகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து குறைக்கப்பட்ட ஊதியமானது இந்தியத் தொகுப்பு நிதியில் செலுத்தப்பட இருக்கின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மட்டுமே குறைக்கப் பட்டுள்ளன. அவர்களின் படிகள் மற்றும் முன்னாள் உறுப்பினர்களின் ஓய்வூதியங்கள் குறைக்கப் படவில்லை.
மேலும் மத்திய அமைச்சரவையானது நாடாளுமன்ற உறுப்பினர்களின் உள்ளூர்ப் பகுதி/ தொகுதி மேம்பாட்டு வளர்ச்சித் திட்டத்தினை (MPLADS - Members of Parliament Local Area Development Scheme) 2 ஆண்டுகளுக்கு, அதாவது 2020-21 மற்றும் 2021-22 ஆகிய காலத்திற்கு நிறுத்தி வைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
MPLADS என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் உள்ளூர்ப் பகுதி வளர்ச்சித் திட்டம் என்பதைக் குறிக்கின்றது.
இது 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது.
இதன் செயல்பாடுகளை மத்தியப் புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை மேற்பார்வையிடுகின்றது.
இது முழுவதும் இந்திய அரசால் நிதி அளிக்கப் படுகின்றது.
2011-12 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு MPக்கும் ஆண்டிற்கு ரூ.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் படுகின்றது .
இந்த நிதியானது காலாவதியாகாத (non lapsable) தன்மை கொண்டதாகும். அதாவது, குறிப்பிட்ட ஆண்டில் இந்த நிதியானது செலவு செய்யப் படவில்லையெனில் இந்த நிதி அடுத்த ஆண்டுக் கணக்கில் சேர்க்கப் படும்.